பீகார் மாநிலத்தில் திறப்பு விழாவுக்கு முன்பே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இம்மாநிலம், அராரியா மாவட்டத்தில் பத்ரா நதிக்கு குறுக்கே பத்கியா காட் எனும் பகுதியில் ரூ.12 கோடி செலவில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த மேம்பாலp பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
தற்போது இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், இன்னும் சில தினங்களில் இந்த மேம்பால திறப்பு விழா நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், இந்த மேம்பாலம் நேற்று (18-06-24) திடீரென்று இடிந்து விழுந்தது. இதனை அங்கிருந்த சிலர், தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்த விசாரணையில், தரமற்ற கட்டுமானத்தால் இந்த மேம்பாலம் இடிந்து விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. திறப்பு விழாவுக்கு முன்பே பாலம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.