Skip to main content

‘நா... படிக்கணும் என்ன விட்றுங்க...’- தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் எடுத்த முடிவு 

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
  bride refused to marry while tying the thali

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மணப்பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

கர்நாடக மாநிலம் சிக்கப்யலாடகெரே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் திப்பரெட்டிகலியே பகுதியைச் சேர்ந்த யமுனாவிற்கும் பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து, கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 7 ஆம் தேதி இருவருக்கும் சிக்கப்யலாடகெரேவில் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், மணமேடையில் மணமகன் தாலி கட்ட முயன்றபோது, திடீரென எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று மணமகள் கூறியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் பெண்ணை சமாதானம் செய்து திருமணத்தை நடத்த முயன்றபோது, பெண் பிடிவாதமாக எனக்கு திருமணம் வேண்டாம் நான் படிக்கணும் என்று கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மணப்பெண் திருமணத்திற்கு முதலில் சம்மதம் தெரிவித்துள்ளார். பின்பு அவருக்கு திருமணம் நடக்கவிருந்த ஒரு வாரத்திற்கு முன்பு அரசுக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படிக்க கல்லூரியில் சீட் கிடைத்ததால், தனது பெற்றோரிடம் தான் படிக்க வேண்டும் என்று கூறி திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் மணப்பெண்ணின் பேச்சை கேட்காமல் திருமணத்தை நடத்தவிருந்ததாகவும், அதனால்தான் தாலி கட்ட மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

12 ஆண்டுகளாக போராடி வரும் தாய்; சோனியா காந்தி வீட்டின் முன்பு தர்ணா!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Mother who has been fighting for 12 years, Sonia Gandhi house dharna protest

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலம், தட்சின கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தப்ப கவுடா. இவரது மனைவி குசுமாவதி. இவர்களது மகள் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அவர், கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி, கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது, ஒரு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பரிதாபமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர்.

அவர் அளித்த அந்த புகாரின் பேரில், கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் பின், அந்த வழக்கை மாநில சி.ஐ.டி போலீசார் விசாரித்து வந்தனர். அதன் பின்னர், இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபர், இந்த வழக்கிலிருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  

இதனால், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாய் குசுமாவதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வீட்டு முன்பு நேற்று முன்தினம் (02-03-24) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து, குசுமாவதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அவருடைய உதவியாளர் என்னுடைய கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதையடுத்து, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடகா முதல்வரிடம் சோனியா காந்தி வலியுறுத்துவார் என்று அவர் என்னிடம் உறுதி அளித்தார். இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன்” என்று கூறினார். 

Next Story

பெங்களூர் வெடிகுண்டு விவகாரம்; சித்தராமையா தகவல்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
 Siddaramaiah information about Bangalore Bomb Affair

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கபே என்ற பிரபல உணவகத்தில் நேற்று பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் மர்மப் பொருள் ஒன்று வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவி பலர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் சிக்கியவர்களை மீட்டனர். இந்த வெடி விபத்தில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்து தேசியப் புலனாய்வு முகமை தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளது.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த காட்சிகள் அடிப்படையில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர் எந்த பகுதியில் சென்றாரோ அந்த பகுதியில் உள்ள இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மங்களூரு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு சம்பவத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு கிடையாது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஒருவரா? அல்லது ஒரு கும்பலா? எனத் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை குழு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பா.ஜ.க இதை அரசியலாக்கக் கூடாது” என்று கூறினார்.