தலைவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டும், ரத்த தானத்தின் மீதான விருப்பத்தின் அடிப்படையிலும் பலர் ரத்த தானம் செய்வது வழக்கமானதுதான். ஆனால் தாயில்லாத குழந்தைகளுக்கும் தாய்ப்பாலின் நலன் கிடைக்கவேண்டும் என்ற காரணத்துக்காக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு குஜராத்தின் சூரத் நகரில் தாய்ப்பால் தான முகாம் நடைபெற்றுள்ளது.
பிரசவத்தின்போதோ அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளிலோ தாய் இறந்துபோகும்போது, குழந்தைகள் இழப்பது தாயின் அரவணைப்பை மட்டுமல்ல, தாய்ப்பாலின் நன்மைகளையும்தான். இதை நிவர்த்தி செய்யும் நோக்கில் யசோதா பால் வங்கியும் மகளிர் அமைப்பொன்றும் சூரத் நகரில் ஆண்டுதோறும் தாய்ப்பால் தான முகாமை நடத்தி வருகின்றன.
21-வது வருடமாக கடந்த ஆகஸ்டு 5-ஆம் தேதி தாய்ப்பால் தான முகாமுக்கு யசோதா தாய்ப்பால் வங்கி ஏற்பாடு செய்தது. 130 தாய்மார்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பால் தானம் செய்தனர். இந்தப் பால் சேகரிக்கப்பட்டு கிருமிநீக்கம் செய்யப்பட்டு குளிர்பதனம் செய்யப்பட்டுள்ளது. தாயை இழந்த குழந்தைகளுக்கு இந்த பால் வழங்கப்படும்.
உரிய காலத்துக்கு முன்னே பிறக்கும் குழந்தைகளின் குடல் அழற்சி நோய்க்கு தாய்ப்பாலே சிறந்த மருந்தாகும். மேலும், தாய்ப்பாலில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் டி, கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும் ஆன்டிபாடிகள் நிறைந்துள்ளன. டைப் 1, டைப் 2 சர்க்கரை நோய் வருவதிலிருந்து தடுக்க தாய்ப்பால் உதவுவதும் ஆய்வில் நிறுவப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைக்கு பால் கொடுத்தால் அழகு குறையும் என்பது தவறான நம்பிக்கை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமும் கருணையும் இருப்பவர்கள் அடுத்தவர் குழந்தைக்கு தாய்ப்பால் தானம் பண்ணட்டும். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் சொந்தக் குழந்தைக்காவது பால் தரவேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.