தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் நேற்று முன்தினம் (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு சூரல்மலா வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை மீட் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்னும் மூன்று நாட்களுக்கு கேரளாவில் அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. இந்திய அளவில் பெரும் தாக்கத்தை வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்தியுள்ளது.
இன்று (01/08/2024) மாலை 6.30 மணி நிலவரப்படி வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்துள்ளது. வயநாட்டின் முண்டகை, சூரல்மலா பகுதி மட்டுமல்லாது மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் போத்துக்கல் சாலியாற்று பகுதியிலும் பேரிடர் மீட்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றங்கரையின் பகுதியில் மண்ணில் புதைந்திருந்த 54 முழு உடல்களும், 84 உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழப்பும் 300-ஐ தாண்டும் என்ற என்ற அச்சம் அங்கு நிலவியுள்ளது.