உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்காக லக்னோவில் ஜெயபிரகாஷ் நாராயண் இன்டர்நேஷனல் சென்டர் (ஜெபிஎன்ஐசி) என்ற மையத்தை திறந்து வைத்தார். அதன் பின்பு, 2017ஆம் ஆண்டில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதன் கட்டுமான பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஜெயந்தி அவரது பிறந்தநாளான இன்று (11-10-24) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி, லக்னோவில் ஜெபிஎன்ஐசி மையத்தில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயணனில் சிலைக்கு முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று திட்டமிட்டிருந்தார். ஆனால், நேற்று இரவு அந்த மையத்திற்குள் யாரும் நுழையாதபடி, தகரத் தடுப்புகள் வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அகிலேஷ் யாதவ், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். இதனையடுத்து, உடனடியாக அங்கு வந்த சமாஜ்வாதி கட்சியினர் ஏராளமானோர் வந்து திரண்டதால், அந்த இடம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அகிலேஷ் யாதவ், “மக்கள் அஞ்சலி செலுத்த முடியாதபடி சுவர் எழுப்பப்பட்டுள்ளது. பா.ஜ.கவின் மூட சிந்தனைகளின் அடையாளம் தான் இது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற ஜெய் பிரகாஷ் நாராயண் போன்ற ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரர் மீதும் பா.ஜ.க.வினர் வெறுப்பையும் விரோதத்தையும் வைத்துள்ளனர். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத பா.ஜ.க சகாக்களுக்குள் இருக்கும் குற்ற உணர்வுதான் புரட்சியாளர்களின் பிறந்தநாளில் கூட அஞ்சலி செலுத்த அனுமதிப்பதில்லை.
கடந்த முறை போல் ஜெய் பிரகாஷ் நாராயணனின் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதை தடுக்கும் வகையில், எங்களின் இடத்தைச் சுற்றி தடுப்பு வேலிகள் போடப்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர். எங்களுக்கு பாஜக வேண்டாம் என்று எல்லோரும் சொல்ல தொடங்கிவிட்டனர்” என்று தெரிவித்து பா.ஜ.கவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அகிலேஷ் யாதவுக்கு எதிரான செயலால், அம்மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.