Skip to main content

உணவில் பிளேடு; விமான பயணிக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
blade in food to distributed by the air passenger;

கடந்த 9ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சான்பிரான்சிஸ்கோ செல்வதற்காக ஏர் இந்தியா எனும் விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணித்த பயணியான பத்திரிகையாளர் மதுரஸ் பால், விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தனது வேதனையைப் பதிவு செய்தார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஏர் இந்தியாவின் விமானத்தில் வழங்கப்பட்ட அத்திப்பழ சாட் உணவு ஒன்றில் பிளேடு கிடந்தது. நான் அதை இரண்டு அல்லது மூன்று வினாடிகள் மென்று சாப்பிட்ட பிறகு அது என் உணவில் இருப்பதை உணர்ந்தேன். நான் அதை துப்பியவுடன், அது பிளேடு என்பது தெரியவந்தது. இதற்கு பணிப்பெண் மன்னிப்பு கேட்டார். மேலும் அவர், ஒரு கிண்ணம் கொண்டைக்கடலை வழங்கினார். எந்தவொரு விமானத்திலும் பிளேடு இருப்பது ஆபத்தானது. இரண்டாவது, அது என் நாக்கை வெட்டக்கூடும். மூன்றாவதாக, ஒரு குழந்தை இந்த உணவை சாப்பிட்டால் என்ன செய்வது’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இவர் பதிவிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நடந்த சம்பவத்தை ஏர் இந்தியா நிறுவனம் ஒப்புக்கொண்டது. இது குறித்து தலைமை வாடிக்கையாளர் அனுபவ அதிகாரி ராஜேஷ் டோக்ரா கூறுகையில், “எங்கள் கேட்டரிங் பார்ட்னர் பயன்படுத்தும் காய்கறிகளை வெட்டுவதற்கு பயன்படுத்தும் இயந்திரத்தின் பாகம் என நாங்கள் ஆராய்ந்து கண்டறிந்துள்ளோம். கடினமான காய்கறிகளை நறுக்கிய பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இனி இதுபோன்று நடப்பதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'அத்தி சாட்டில் பிளேடு துண்டு' - மன்னிப்பு கோரிய ஏர் இந்தியா

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Air India Apologizes for 'Blade Piece in Fig Chat'

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு துண்டு கிடந்தது தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்ட சம்பவமும், அதற்காக விமான சேவை நிறுவனம் கொடுத்த இழப்பீட்டை வாங்க மறுத்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

பெங்களூரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கடந்த ஒன்பதாம் தேதி மதுரஸ் பால் என்ற பத்திரிகையாளர் பயணித்துள்ளார். பயணத்தின் போது ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் அத்தி சாட் உள்ளிட்ட பல உணவுகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் அத்தி சாட் உணவில் பிளேடு ஒன்று இருந்துள்ளது. இதனை அறியாமல் பத்திரிகையாளர் மதுரஸ் பால் மென்று சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீரென வாயில் ஒரு தடிமனான பொருள் சிக்கியது. அதனை எடுத்து பார்த்த பொழுது பிளேடு துண்டு எனத் தெரியவந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்.

இதை ஒருவேளை சிறுவர்கள் அல்லது முதியவர்கள் சாப்பிட்டிருந்தால் என்னவாகி இருக்கும் எனக் கேள்வி எழுப்பி சமூக வலைத்தளபக்கத்தில் இது தொடர்பான புகைப்படங்களை மதுரஸ் பால் ஏர் இந்தியா நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தை டேக் செய்து வெளியிட்டு இருந்தார். காய்கறிகளை வெட்டிய போது பிளேடு உடைந்து உணவில் கலந்துள்ளது தெரியவந்தது. இதைத் தலைமை வாடிக்கையாளர் அனுபவ அதிகாரி ராஜேஷ் டோக்ரா உறுதி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஏர் இந்திய நிறுவனம் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் மதுரஸ் பாலிடம் மன்னிப்பு கோரியதோடு, இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்திருந்தது. ஆனால் அதனை தான் வாங்க மறுத்ததாக சமூக வலைத்தளத்தில் மதரஸ் பால் தெரிவித்துள்ளார்.  

Next Story

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் பணிநீக்கம்!

Published on 09/05/2024 | Edited on 09/05/2024
Air India Express employees sacked

போராட்டத்தில் ஈடுபட்ட 25 ஊழியர்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் திடீரென விடுப்பு எடுத்து நேற்று போராட்டத்தைத் தொடங்கினர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்களின் இந்தத் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் உள்ள விமான சேவைகள் பெரிதும் பாதிப்படைந்தன. இத்தகைய சூழலில்தான் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன கேபின் குழு ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் (09.05.2024) விடுப்பு எடுத்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் சென்னையில் இருந்து கொல்கத்தா, திருவனந்தபுரம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கு புறப்பட வேண்டிய 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் பணிக்கு வராமல் விடுப்பு எடுத்த ஊழியர்கள் 25 பேரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே சமயம் திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவதியடைந்த பயணிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.