நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் 175 தொகுதிகளை கொண்ட ஆந்திரமாநில சட்டமன்ற தேர்தலில் 164 தொகுதிகளில் வெற்றிபெற்று ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணி வீழ்த்தி அமோக வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் கூட்டணியில் பாஜகவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார். இன்று நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். இவ்விழாவில் பிரதமர் மோடி, பாஜக மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, நடிகர்கள் ரஜினிகாந்த், சீரஞ்சிவி, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
பதவி ஏற்பு விழாவிற்கு வருகை தந்த மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா இருவரையும் சந்திரபாபு நாயுடு வரவேற்றார். அப்போது சந்திரபாபு நாயுடுவிடம் கைகுலுக்கி விட்டு திரும்பிப் பார்த்த அமித்ஷா, உதவியாளர் வைத்திருந்த பூங்கொத்தை வாங்கி சந்திரபாபு நாயுடுவிடம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பூங்கொத்தை மீண்டும் உதவியாளரிடமே அமித்ஷா கொடுக்க அதேசமயம் வெறும் கையோடு வாழ்த்து தெரிவிக்க காரில் வந்து இறங்கிய ஜே.பி.நட்டா சந்திரபாபு நாயுடுவுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
ஜே.பி.நட்டா பூங்கொத்து கொண்டுவராததை கவனித்த அமித்ஷா, உதவியாளரிடம் தான் கொடுத்த பூங்கொத்தை வாங்கி, அதே பூங்கொத்தை மீண்டும் சந்திரபாபு நாயடுவுக்கும் கொடுக்கவும் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், கூட்டணி கட்சி தலைவரை சந்திக்க வரும் போது, பூங்கொத்து கூட வாங்கி வராமல் ஒரே பூங்கொத்தை கொடுப்பதா என இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.