Skip to main content

காங்கிரஸ் கட்சிக்கே ராகுல் காந்திதான் அபசகுனம்; பா.ஜ.க கடும் தாக்கு 

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

BJP says Rahul Gandhi is a disgrace to the Congress party

 

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. 

 

இதையொட்டி, ராஜஸ்தானில் பலோத்ரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் (21-11-23) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடி டி.வியில் தோன்றி இந்து - இஸ்லாமியர்கள் குறித்து பேசுவார். ஆனால், சில நேரங்களில் திடீரென்று கிரிக்கெட் போட்டி பார்ப்பதற்காக அவர் சென்றுவிடுவார். நமது கிரிக்கெட் வீரர்கள் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கொண்டிருந்தனர்.

 

ஆனால், துரதிர்ஷ்டவசத்தின் முன்னோடி அவர்களை தோற்கடித்து விட்டார். தொலைக்காட்சி சேனல்கள் இதை பற்றி சொல்லாது. ஆனால், இது பொதுமக்களுக்கு தெரியும்” என்று பிரதமர் மோடியை மறைமுகமாக குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனால், பா.ஜ.க தலைவர்கள், ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

 

அதன்படி, மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க தலைவர் வி.டி.சர்மா இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “உலகிலேயே மிகவும் பிரபலமான தலைவர் பிரதமர் மோடிக்கு எதிரான இத்தகைய கருத்துக்களை தெரிவித்ததன் மூலம் ராகுல் காந்தி தனது மந்தபுத்தியை காண்பித்துள்ளார். மேலும் அவர், 130 கோடி இந்திய மக்களையும் இழிவுபடுத்திவிட்டார். காங்கிரஸ் கட்சி தனது பலத்தை இழந்திருப்பதற்கு ராகுல் காந்தியும், அவர் பயன்படுத்திய பேச்சும்தான் காரணம்” என்று கூறினார்.

 

அதேபோல், ஹரியானா மாநில உள்துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அனில் விஜ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, “ராகுல் காந்தி விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்டார். கிரிக்கெட் என்பது ஒரு போட்டி. இந்த போட்டியில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம், தோல்வி அடையலாம். இதை ஒரு விளையாட்டு மனநிலையோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.  

 

ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சிக்கே அபசகுனம். அவர் காங்கிரஸின் முகமாக உருவெடுத்ததில் இருந்தே அந்த கட்சி மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் கட்சியினர் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த 10 ஆண்டுகளில் அவர்களுடைய அமைப்பு உருவாக்கப்பட்டு நாங்கள் பார்க்கவில்லை” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்