கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த 16ஆம் தேதி கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில், பேசிய முதல்வர் சித்தராமையா, “தேவையான அனுமதிகளைப் பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என்று பேசியிருந்தார். இது தற்போது விவாதப் பொருளாக மாறி வருகிறது.
அதனைத் தொடர்ந்து, சிகரெட் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்து கர்நாடக சட்டப்பேரவையில், அது தொடர்பான சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், கர்நாடக சட்டசபையில் ‘கர்நாடகா இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024’ நேற்று முன் தினம் (21-02-24) நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தின்படி, கோவிலின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கும் அதிகமாக இருந்தால், அந்த கோவில்கள் 10% வரி செலுத்த வேண்டும். ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ள கோவில்கள் 5% வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, கர்நாடகா பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது குறித்து கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் விஜயேந்திர எடியூரப்பா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “ஆளும் காங்கிரஸ் அரசு இந்து விரோதக் கொள்கைகளைக் கடைபிடித்து, தற்போது இந்து கோவில்களின் வருவாயை குறிவைத்துள்ளது.
கோவில் வளர்ச்சிக்கு பக்தர்கள் அர்ப்பணிக்கும் காணிக்கையை, கோவில் திருப்பணிக்கு ஒதுக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். கோவில்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வேறு பணிகளுக்கு பயன்படுத்த காங்கிரஸ் அரசு திட்டமிடுகிறது. அப்படி வரி வசூல் செய்வதாக இருந்தால் அனைத்து மத நிறுவனங்களில் இருந்தும் வசூலிக்கலாம். ஏன் இந்து கோவில்களில் இருந்து மட்டும் வசூலிக்க வேண்டும்” என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார்.