Skip to main content

பா.ஜ.க முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; பிரதமர் மோடி தொகுதி?

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
BJP preliminary list of candidates released

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில், முதற்கட்டமாக 170 முதல் 190 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. உறுதி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை பா.ஜ.க பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே வெளியிட்டார். 

அந்த பட்டியலில், 34 மத்திய அமைச்சர்கள் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான பா.ஜ.க வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்தியப் பிரதேசத்தில் 24, மேற்கு வங்கத்தில் 20, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 15 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க அறிவித்துள்ளது. இந்த முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 28 பெண்கள், 27 பட்டியலினத்தவர்கள், 18 பழங்குடியினர், 57 ஓ.பி.சி பிரிவினர்களின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. முக்கியமாக 50 வயதுக்கு உட்பட்ட 47 பேருக்கு போட்டியிட பா.ஜ.க வாய்ப்பு அளித்துள்ளது. இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.

நட்சத்திர வேட்பாளராக, வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடவுள்ளார். மலையாள நடிகரும் பா.ஜ.கவைச் சேர்ந்தவருமான சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில் போட்டியிடுகிறார்.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் போட்டியிடுகிறார். மதுராவில், நடிகையும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஹேமமாலினி மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மீண்டும் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் போட்டியிடுகிறார். 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
Summons to Nayanar Nagendran

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த  06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்த சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் நெல்லையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Next Story

'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'-கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'Issuing election manifesto on Ambedkar's birthday is a scam by BJP' K. Balakrishnan reviewகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,'' காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அதனை நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  பாட்டாளி மக்கள் கட்சி கையை முறுக்கி கடைசி நேரத்தில் கையெழுத்து வாங்கி உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சாதி ஏற்றத்தாழ்வுகள் பிரம்மாவால் படைக்கப்பட்டது. வருணாசிர தத்துவம் தான் இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவோடு இட ஒதுக்கீட்டிற்காக போராடும் நீங்கள் சமூக நீதியை வற்புறுத்துவதற்காக போராடும் நீங்கள் தேர்தல் உறவு கொண்டது இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?

அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கிறவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிக்கிறவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் எங்கள் லட்சியம் என்பவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கக் கூடிய பா.ஜ.க அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம். சிதம்பரத்தில் திருமாவளவன் மகத்தான வெற்றி பெறுவார்'' எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்லைவர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.