மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம், தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மறுத்து வரும் பாஜக அரசு, புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் செய்து வருகிறது. இந்தநிலையில், பஞ்சாப் மாநில பாஜக, புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஒரு போஸ்டரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. அதில் ஒரு விவசாயி புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. அந்த புகைப்படத்தால் தற்போது இணையவாசிகளின் கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறது பஞ்சாப் மாநில பாஜக.
பாஜக வெளியிட்ட ஃபேஸ்புக் போஸ்டரில் இருந்த விவசாயி, தற்போது சிங்கு எல்லையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் ஆவர். மென்பொருள் பொறியியல் துறையில் பட்ட மேற்படிப்பை முடித்துவிட்டு, தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹர்ப்ரீத் சிங்கே என்பவர்தான் பாஜக போஸ்டரில் இடம்பெற்றிருந்த அந்த விவசாயி. இவரை இவரது நண்பர்கள், ஹர்ப் பார்மர் (harp farmer) என்றே அழைக்கின்றனர்.
ஹர்ப்ரீத் சிங் தனது புகைப்படத்தை வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்தியது தெரிந்ததும் முதலில் சிரித்தாகவும், பின்னர் காயப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் "பாஜக தனது பேஸ்புக் பக்கத்தில் எனது படத்தைப் பயன்படுத்துகிறது என்று நேற்று மாலை எனது கிராமத்தில் உள்ள ஒரு நண்பரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. முதலில் நான் சிரித்தேன், ஆனால் பின்னர் நான் காயப்பட்டேன். எனது அனுமதியின்றி அவர்கள் அதை எப்படிச் செய்ய முடியும்?.விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்கள் ஏன் டெல்லி எல்லைகளில் முகாமிடுவார்கள் என்று நான் அரசாங்கத்திடம் கேட்க விரும்புகிறேன். பெண்கள் உட்பட வயதானவர்கள் நடுங்கும் டிசம்பரின் குளிரை ஏன் தாங்கவேண்டும்? விவசாய சட்டங்களை அரசாங்கம் ஏன் திரும்பப் பெற முடியாது? இது ஈகோ பிரச்சனை வேறு ஒன்றும் இல்லை. அரசாங்கம் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால், நாங்கள் வீடு திரும்ப மாட்டோம்" எனக் கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயி புகைப்படத்தை வைத்து, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த பஞ்சாப் பாஜகவை இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து, பாஜக அந்த போஸ்டரை தனது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளது.