BJP people attacked the police in the rally; The excitement in West Bengal

Advertisment

பாஜக கட்சிக் கொடியுடன் அசிஸ்டெண்ட் கமிஷனரை விரட்டி விரட்டி தாக்கிய பாஜகவினரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. பாஜகவினரை போலீசார் பல்வேறு வழக்குகளின் கீழ் கைதுசெய்து வருவதாகவும் புகார் சொல்லப்பட்டது. இந்நிலையில், கொல்கத்தாவில் தலைமைச் செயலகத்தை நோக்கி 'நபன்னா அபிஜன்' என்ற பெயரில் பேரணி செல்லப்போவதாக பாஜக சார்பில் திட்டமிடப்பட்டது. நபின்னா அபிஜன் என்றால், ஊழலுக்கு எதிரான போராட்டம் எனும் பொருள்படும்.

இந்த பேரணியில் பங்கேற்பதற்காக, மேற்குவங்க மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்களும் நிர்வாகிகளும் குவிந்து வந்தனர். இதற்காக, ஏழு ரயில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்காக 56 லட்சங்கள் செலவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மட்டுமின்றி ஏராளமான பேருந்துகளில் பேரணியில் பங்கேற்பதற்காக வந்தனர்.

Advertisment

இத்தனைக்கும், இந்த பேரணிக்கு மேற்கு வங்க அரசு சார்பில், எவ்வித அனுமதியும் அளிக்கப்படவில்லை. ஆனால், இதையெல்லாம் பெரிதாகப் பொருட்படுத்தாத பாஜகவினர் பேரணியாக செல்வதிலேயே மும்முரமாக இருந்தனர். பேரணி நாளன்று, அனுமதியில்லாத பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால், போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. போலீஸார் மீது, சோடா பாட்டில்கள், கற்கள் எனக் கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், போலீசாரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

கொல்கத்தா அசிஸ்டெண்ட் கமிஷனர் டெப்ஜித் ராய்சவுத்ரி என்பவரை ஓட ஓட விரட்டிய பாஜகவினர், அவர் தடுமாறி கீழே விழுந்த உடன் மிக மோசமாக தாக்கியுள்ளனர். இதில், அவரின் கை உடைக்கப்பட்டிருக்கிறது. அதன் X-ray படங்களும் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

அசிஸ்டெண்ட் கமிஷனர் ஒருவரை பாஜகவினர் தாக்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிக்கே இந்த நிலைமையா? எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.