உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 55 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 4000 க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள், தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் இந்த கரோனா விவகாரத்தில் எப்படி நடந்து கொண்டுள்ளன, அதன் போக்கு சரிதானா என பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ள நிலையில், இந்த லாக் டவுன் முழுமையான தோல்வி என்று சில தினங்களுக்கு முன்பு ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக எம்பி பர்வேஷ் வர்மா சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “இந்த நாட்டை 50 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள்தான் ஆட்சி செய்து வருகிறார்கள். அந்த குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்போது மக்களிடம் தவறான தகவல்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். எனவே சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூவரையும் லாக் டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு முட்டாள் தனமானது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.