Skip to main content

சபரிமலையில் பெண்கள் வழிபாடு! ஆதரவுக் குரல் எழுப்பும் பா.ஜ.க. எம்.பி.!

Published on 03/01/2019 | Edited on 03/01/2019

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரண்டு பெண்கள் நுழைந்து, வழிபட்டு வந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனை வாழ்த்தியுள்ளார் பாஜகவைச் சேர்ந்த எம்.பி. ஒருவர்.
 

Udit

 

 

 

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில், பெண்களை வழிபட அனுமதித்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். இதனை அமல்படுத்த கேரளாவை ஆளும் சிபிஎம் அரசு முயற்சிசெய்து வரும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக பாஜகவினர் போராட்டம் நடத்துகின்றனர். இந்த விவகாரத்தில் எதிர்கட்சியான காங்கிரஸும் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதால், சபரிமலைக் கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா பகுதி கடந்த சில மாதங்களாக பரபரப்பாகவே காணப்படுகிறது. 
 

 

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த பிந்து மற்றும் கனகதுர்கா ஆகிய இரண்டு பெண்கள், நேற்று அதிகாலை சபரிமலைக் கோவிலுக்குள் போலீசார் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனை வழிபட்டு வந்தனர். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தாலும், பாஜகவினர் கேரளாவில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இன்று கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். 
 

இதற்கிடையில் பாஜகவைச் சேர்ந்த எம்.பி. உதித் ராஜ், சபரிமலை கோவிலில் பெண்கள் வழிபட்டதை வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர், இதனை நான் ஆதரிக்கிறேன். பெண்களிடம் இருந்துதான் மனிதன் பிறக்கிறான். அப்படி இருக்கையில், அவர்களை தூய்மையற்றவர்கள் என்று எப்படி சொல்லமுடியும்? எங்கும் வியாபித்திருக்கும் கடவுள் முன் நாம் ஒவ்வொருவருமே சமமானவர்கள்தான்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 

மேலும், பாரம்பரியத்தின் பெயரால் ஆன பழக்கவழக்கங்கள் தீங்கானவையாக இருந்தால், அவற்றை உடைத்தெறிய வேண்டும். சதி, குழந்தைத் திருமணம், கேரளாவில் மார்பக வரி போன்றவற்றை பாரம்பரியத்தைக் காரணம் காட்டித்தானே செய்தார்கள். அவை தீமை என்று அறிந்துதானே உடைத்தெறிந்தோம் எனவும் விளக்கமளித்துள்ளார்  
 

சார்ந்த செய்திகள்