இந்தியாவில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் விஜயதசமி பண்டிகை நேற்று முன்தினம் (12-10-24) கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீடுகள், வேலை செய்யும் நிறுவனங்கள், கடைகள், வாகனங்கள் என அனைத்தையும் தூய்மைப்படுத்தி அதனை மலரால் அலங்கரித்து இறைவழிபாடு செய்தனர். குறிப்பாக வட மாநிலங்களில், புது ஆடை அணிந்து சாமி தரிசனம் செய்து நடனமாடி மக்கள் கொண்டாடினார்கள். அந்த வகையில், விஜயதசமி கொண்டாட்டத்தின் போது, பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் மாணவிகளுக்கு வாள்களை விநியோகம் செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், சீதாமரி நகர் பகுதியில் விஜயதசமி கொண்டாடப்பட்டது. இதற்காக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், பா.ஜ.க எம்.எல்.ஏ மிதிலேஷ் குமார் பங்கேற்றார். அப்போது அவர், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு வாள்களை வழங்கினார். இது குறித்து அவர் பேசும்போது, “நமது சகோதரிகளைத் தீயவர்கள் தொடத் துணிந்தால், அவருடைய கை இந்த வாளால் வெட்டப்படும். நம்முடைய சகோதரிகளை, தீயவர்களின் கைகளை வெட்டும் திறன் கொண்டவர்களாக நாம் உருவாக்க வேண்டும். தேவைப்பட்டால் நானும் நீங்களும் இதைச் செய்ய வேண்டும். நம் சகோதரிகளுக்கு எதிராக தீய எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் அழிக்கப்பட வேண்டும். எனது முயற்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
அதனை தொடர்ந்து அவர், பல்வேறு வகை துப்பாக்கிகள் மற்றும் வாள்களை வைத்து சாமி தரிசனம் செய்தார். மாணவிகளுக்கு வாள்களை வணங்கி, தீயவர்களை இந்த வாளால் வெட்டப்படும் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.