Skip to main content

"எம்.எல்.ஏ மனைவிக்கே இந்த நிலையென்றால்" - பாஜக எம்.எல்.ஏவின் அதிர்ச்சி குற்றச்சாட்டு! 

Published on 11/05/2021 | Edited on 11/05/2021

 

up bjp mla
                                                                       FILE PIC

 

இந்தியாவில் கரோனா பரவல் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்திலும் கரோனா தீவிரமாகப் பரவிவருகிறது. இந்தியாவில் கரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில், உத்தரப்பிரதேசம் நான்காவது இடத்தில் உள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநில மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் எந்தவித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என கூறிவருகிறார்.

 

இந்தநிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தின் ஜஸ்ரானாவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராம்கோபால் லோதி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கரோனா பாதிக்கப்பட்ட தனது மனைவிக்கு மருத்துவமனையில் போதுமான உணவு, தண்ணீர் வழங்கப்படவில்லை என்றும், மேலும் தனது மனைவி மூன்று மணி நேரம் தரையில் படுக்கவைக்கப்பட்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, "எனது மனைவி முதலில் மருத்துவமனைக்குச் சென்றபோது, மருத்துவமனையின் காவலர்களால் திருப்பி அனுப்பப்பட்டார். பிறகு நான் ஆக்ராவின் மாவட்ட மாஜிஸ்திரேட்டை தொடர்புகொண்டேன். அவர் எனது மனைவிக்கு மருத்துவமனையில் அனுமதி வாங்கி தந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை குறித்து தகவல் இல்லை. மருத்துவமனையில் உள்ள யாரையும் என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை" என கூறியுள்ளார்.

 

தற்போதுதான் தான் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளதாகவும், தனது உடல்நிலை பலவீனமாக இருப்பதால் ஆக்ராவரை சென்று பார்க்க முடியவில்லை என கூறியுள்ள  எம்.எல்.ஏ ராம்கோபால் லோதி, ஒரு எம்.எல்.ஏ மனைவிக்கே சரியான கவனிப்பு இல்லையென்றால், சாதாரண மக்களுக்கு என்ன நடக்கும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

ஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் இந்தக் குற்றசாட்டு, உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிலவும் அவல நிலையைக் கூறுவதாக அமைந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.