மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்ததில் இருந்து பசு பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொண்டு, பசு குண்டர்கள் அப்பாவி பொதுமக்கள் தாக்கப்பட்டனர். கடந்த ஆண்டு வெளியான தகவலின்படி பாஜக ஆட்சி அதிகாரத்தைப் பெற்றதில் இருந்து 23 பேர் பசுவின் பெயரால் படுகொலை செய்யப்பட்டனர். இது பாஜகவின் மேல் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பசு குண்டர்கள் தாக்குதல் நடத்திய பகுதிகளில் பாஜக படுதோல்வியையும், பின்னடைவையும் சந்தித்திருக்கிறது. பாஜக செல்வாக்கு மிகுந்த சில இடங்களில் ஓரளவுக்கு வெற்றிபெற்றிருந்தாலும், அது முந்தைய காலங்களோடு ஒப்பிடும்போது மிகப்பெரிய பின்னடைவே என்கிறது களநிலவரம்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராம்கர் மாவட்டத்தில் அலிமுதீன் அன்சாரி எனும் இறைச்சி வியாபாரி தாக்கப்பட்ட சம்பவம், கோதெர்மா மாவட்டத்தில் திருமண விழாவின்போது மாட்டிறைச்சி விருந்து சாப்பிட்ட பத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் மீது தாக்குதல் நடத்தியது, லடேஹர் மாவட்டத்தில் மாட்டிறைச்சியை விற்பதற்காக எடுத்துச்சென்ற இருவரைக் கொன்று மரத்தில் தொங்கவிட்ட சம்பவம் என ஒவ்வொரு பகுதிவாரியாக பாஜக பின்னடைவுக்கான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. பாஜக தோல்வியுற்ற பகுதிகளில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர்கள் வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.