குஜராத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. அதேபோல் இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் துவங்கி நடைபெற்று வருகிறது.
குஜராத்தில் பாஜக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி பாஜகவினர் முன்னிலையில் உரை நிகழ்த்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பாஜகவினர் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத் பாஜக முதல்வர் வேட்பாளர் பூபேந்திர படேல், தான் போட்டியிட்ட கட்லோடியா தொகுதியில் 58,529 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் இமாச்சலப்பிரதேசத்தில் சிராஜ் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜெயராம் தாகூர் 33,256 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், மோர்பியில் தொடக்கம் முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அண்மையில் குஜராத் மாநிலம், மோர்பியில் சத்பூஜைக்காக ஆற்றைக் கடந்து கேபிள் பாலத்தில் மக்கள் சென்ற போது இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த விபத்தில் 142 பேர் உயிரிழந்தனர். புனரமைக்கப்பட்ட சில தினங்களிலேயே பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது பாஜக அரசின் மீது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், மோர்பி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் தொடக்கம் முதலே பாஜக முன்னணியில் உள்ளது.