இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (29.11.2021) தொடங்கவுள்ளது. இதனையொட்டி மத்திய அரசு சார்பில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதேபோல், பாஜக கூட்டணிக் கட்சிகளின் (தேசிய ஜனநாயக கூட்டணியின்) அவைத்தலைவர் கூட்டமும் நடைபெற்றது.
இந்த இரு கூட்டங்களிலும் கலந்துகொண்ட பாஜக கூட்டணியில் இருக்கும் மேகாலயாவைச் சேர்ந்த தேசிய மக்கள் கட்சியின் எம்.பி. அகதா சங்மா, சிஏஏவை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த இரு கூட்டங்களிலும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.பி. அகதா சங்மா தனது கோரிக்கை குறித்து கூறுகையில், "மக்களின் உணர்வுகளை முதன்மையாகக் கருத்தில்கொண்டு வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதுபோல், வடகிழக்கு மாநில மக்களின் உணர்வுகளை மனதில்கொண்டு சிஏஏவை ரத்து செய்யுமாறு நான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டேன். எனது கட்சி சார்பாகவும் வடகிழக்கு மக்கள் சார்பாகவும் இந்தக் கோரிக்கையை முன்வைத்தேன். இதே கருத்தைப் கொண்டுள்ள இன்னும் சிலரை எனக்குத் தெரியும்" என கூறியுள்ளார்.
மேலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், சிஏஏ-வை திரும்பப் பெற வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு அரசு எந்தப் பதிலையும் அளிக்கவில்லை எனவும், அதேநேரத்தில் தனது கோரிக்கையை அரசு குறித்துக்கொண்டது எனவும் அகதா சங்மா தெரிவித்துள்ளார்.