
காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் துணை தலைவருமான கெளரவ் கோகோயின் மனைவி பாகிஸ்தான் மற்றும் ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக பா.ஜ.க குற்றச்சாட்டை வைத்தது. இதற்கு மக்களவையில், கெளரவ் கோகாய் பதிலடி கொடுத்துள்ளார்.
அசாம் மாநில காங்கிரஸ் தலைவரான கெளரவ் கோகோய் மீது பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் கெளரவ் பாட்டியா பரபரப்பு குற்றச்சாட்டை சில தினங்களுக்கு முன்பு முன்வைத்தார். கெளரவ் பாட்டியா கூறுகையில், “தேசிய பாதுகாப்பு தொடர்பான சில தீவிரமான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மக்களவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் கௌரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்னுக்கும் பாகிஸ்தான் திட்டக் கமிஷன் ஆலோசகர் அலி தௌகீர் ஷேக் மற்றும் ஐஎஸ்ஐக்கும் உள்ள தொடர்புகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இது மிகவும் கவலைக்குரியது. இது குறித்து, காங்கிரஸ் தலைமையும், கோகோயும் ஒரு விளக்கத்தை வெளியிட வேண்டும். கோகோயின் மனைவி ஒரு வெளிநாட்டு குடிமகள் என்பதாலும், அவர் பணிபுரியும் அமைப்பு ஜார்ஜ் சோரோஸால் நிதியளிக்கப்படுவதாலும் கேள்வி இன்னும் தீவிரமாக இருக்கிறது.
இதுபோன்ற பதவியை வகிக்கும் போது பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான முக்கியமான தகவல்களை அணுகுவதால், கோகோய் இதற்குப் பிறகு எதிர்க்கட்சி துணைத் தலைவராகத் தொடர வேண்டுமா?. சில நாட்களுக்கு முன்பு, ராகுல் காந்தி தனது போராட்டம் இந்திய அரசுக்கு எதிரானது என்று கூறியபோது, இந்தியாவை பலவீனப்படுத்தும் ராகுல் காந்தியின் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல கௌரவ் கோகோய் மற்றும் எலிசபெத், பாகிஸ்தான் மற்றும் ஐஎஸ்ஐ உடன் இணைந்து செயல்பட்டார்களா? என்பது தான் என்னுடைய கேள்வி” என்று கூறினார். அதனை தொடர்ந்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும், கெளரவ் கோகோய் மீது குற்றச்சாட்டை வைத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மக்களவை எதிர்க்கட்சித் துணை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ் கோகோய் இன்று நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “பாட்டியாவின் குற்றச்சாட்டு சிரிக்கத்தக்கது மற்றும் பொழுதுபோக்காவும் உள்ளது. பாஜக, எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எதிராக இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் ஈடுபட்டுள்ளது. பாஜகவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, அதனால், இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பும் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எதிராக அதே அவதூறு பிரச்சாரத்தை அது நடத்தியது, ஜோர்ஹாட் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் என்னை தேர்ந்தெடுத்தன் மூலம் அதற்கு பதிலளித்தார்கள். அசாம் முதல்வர் தனது முதல்வர் பதவியை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில், எனக்கும் ம் எனது குடும்பத்தினருக்கும் எதிராக அவதூறு பிரச்சாரத்தைத் தொடங்குவதன் மூலம் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறார். அசாம் மக்களுக்கு உண்மை தெரியும், நேரம் வரும்போது அவர்களுக்கு தகுந்த பதில் அளிக்கப்படும்” என்று கூறினார்.