தற்போதைய நிலையின்படி, அக்டோபர் முதல் வாரத்தில் இந்தியாவின் கரோனா பாதிப்பு அமெரிக்காவின் பாதிப்பை விஞ்சிவிடும் என ஹைதராபாத்தில் உள்ள பிட்ஸ் பிலானி நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (11/09/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,65,864- லிருந்து 45,62,415 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75,062- லிருந்து 76,271ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34.71 - லட்சத்திலிருந்து 35.42 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், அக்டோபர் முதல் வாரத்தில் இந்தியாவின் கரோனா பாதிப்பு அமெரிக்காவின் பாதிப்பை விஞ்சிவிடும் என ஹைதராபாத்தில் உள்ள பிட்ஸ் பிலானி நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிட்ஸ் பிலானி கல்வி நிறுவனத்தின் அப்ளைட் மேத்தமேட்டிக்ஸ் துறை நடத்திய ஆய்வின்படி, இந்தியா அக்டோபர் மாதத்துக்குள் உலகிலேயே கரோனா பாதிப்பில் முதலாவது இடத்துக்குச் செல்லும். ஏறக்குறைய 70 லட்சம் பேர் அக்டோபர் மாதத்துக்குள் பாதிக்கப்படக்கூடும். அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் அமெரிக்காவின் பாதிப்பை இந்தியா விஞ்சிவிடும். தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பரிசோதனை அடிப்படையில் இந்த எண்ணிக்கை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.