ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் பீம் ஆர்மியின் தலைவராக இருப்பவர் சந்திரசேகர் ஆசாத் ராவன். இவர் நேற்று தனது கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தியோபந்த் என்ற பகுதியில் வந்துகொண்டிருந்த போது, ஹரியானா மாநில பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம கும்பல் சந்திரசேகர் ஆசாத் வந்த காரை நோக்கிச் சுட்டுள்ளனர். அதில் ஒரு குண்டு ஆசாத்தின் வயிற்றில் பாய்ந்துள்ளது. மீதி நான்கு குண்டும் காரின் கதவில் பாய்ந்துள்ளது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஆசாத்தின் ஓட்டுநர் காரை திருப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து மர்ம கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளது.
இதையடுத்து ஆசாத் தியோபந்த்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சஹாரன்பூரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். தற்போது ஆசாத் அபாய கட்டத்தைத் தாண்டி, நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஆசாத்தின் மீது நடத்தப்பட்ட தக்குதலைக் கண்டித்து பீம் ஆர்மி, “சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல், பகுஜன் மிஷன் இயக்கத்தைத் தடுத்து நிறுத்தும் கோழைத்தனமான செயல். குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவாகக் கைது செய்யவும், கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மற்றும் சந்திரசேகர் ஆசாத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், “ஆசாத் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான செயல். பாஜக ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பு இல்லாதபோது பொது மக்களுக்கு என்ன நடக்கும் எனத் தெரியவில்லை” எனத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.