கரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், இதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதே ஓரே தீர்வாகக் கருதப்படுகிறது. இதற்காக, மக்களுக்குத் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள சூழலில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மே ஒன்றாம் தேதி முதல் 18 - 44 வயதுள்ளோருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதியளித்தும், பல மாநிலங்களில் 18-44 வயதினருக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்படவில்லை.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்குச் செலுத்தவே போதுமான தடுப்பூசிகள் இல்லாததால், 18-44 வயதினருக்குத் தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது அம்மாநில அரசு. அதேபோல, டெல்லியிலும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம், மத்திய அரசின் உத்தரவால்தான் டெல்லிக்குத் தடுப்பூசிகளை வழங்கவில்லை என டெல்லியின் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
கூடுதல் தடுப்பூசி கோரிய டெல்லி அரசின் கடிதத்திற்கு, பாரத் பயோடெக் எழுதியுள்ள பதில் கடிதத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மனிஷ் சிசோடியா. அவர் பதிவிட்டுள்ள அந்த கடிதத்தில், "ஒவ்வொரு மாதமும் (தடுப்பூசி) உற்பத்தியை அதிகரித்து வந்தாலும், எங்களால் தேவைக்கு ஏற்ற அளவு தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியவில்லை. மேலும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி நாங்கள் தடுப்பூசிகளை அனுப்பி வைக்கிறோம். எனவே, நீங்கள் கோரியபடி கூடுதல் தடுப்பூசிகளை விநியோகிக்க முடியாததற்காக வருந்துகிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், "தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசு தவறாக நிர்வகிக்கிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலையும், தயாரிப்பு அளவு குறைவாக இருப்பதையும் காரணம் காட்டி பாரத் பயோடெக் நிறுவனம் டெல்லிக்குத் தடுப்பூசி வழங்க மறுக்கிறது. 6.6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது தவறு என மீண்டும் ஒருமுறை நான் கூறுவேன். தடுப்பூசி வராததால், 17 பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த 100 கோவாக்சின் தடுப்பூசி மையங்களை மூட வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்" எனக் கூறியுள்ளார் மனிஷ் சிசோடியா.