மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிச்சைக்காரர் இல்லாத மாநிலமாக மாற்ற மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்தாண்டு இந்தூர் மாவட்டத்தில் பிச்சை எடுப்பதை தடை செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. ஜனவரி 1 முதல் யாராவது பிச்சை போடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று இந்தூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்தூர் நகரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தூர் மாவட்டத்தைத் தொடர்ந்து தலைநகர் போபால் நகரிலும் தற்போது பிச்சை எடுக்கவும் பிச்சை கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போபால் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘தனியாகவோ அல்லது தங்கள் குடும்பத்தினருடன் பிச்சை எடுக்கும் நபர்கள், பொது நடமாட்டத்தையும் போக்குவரத்தையும் சீர்குலைக்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல், அவர்கள் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி பிற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பிச்சை எடுப்பதை ஒரு சமூக அச்சுறுத்தலாக அங்கீகரித்து, இந்த நடைமுறையை ஒழிக்க அரசாங்கம் அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த வகையில், போபால் நகரில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள், சந்திப்புகள், மதத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட பிற பொது இடங்களில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதே போல், பிச்சைக்காரர்களுக்கு பிச்சை கொடுப்பதையும் தடைசெய்யப்படுகிறது. இந்த தடை உத்தரவுகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.