கடும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து நிதி உதவிகள் மற்றும் பொருளுதவிகள் இன்னும் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் இன்னும் வீடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.
சைக்கிள் வாங்குவதற்காக சிறுமி ஒருவர் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளா மழை, வெள்ளத்திற்கு கொடுத்து உதவியதை அறிந்து நாம் அனைவரும் ஆச்சரியப்பட்டோம். வாழ்த்தினோம். இன்னும் ஒரு படி மேலேபோய் ஹீரோ சைக்கிள் நிறுவனம் அந்த சிறுமிக்கு சைக்கிளையே பரிசாக வழங்கியது. இதேபோல் பலரும் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை கொடுத்து உதவினர்.
தற்போது பிச்சைக்காரர் மோகனன் என்பவர் நான்கு கிலோ மீட்டர் நடந்து சென்று மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக தான் சேர்த்து வைத்திருந்த தொகையை கொடுத்து முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்க்குமாறு கூறியிருக்கிறார். இது அனைவரையும் நெகிழ செய்திருக்கிறது.
கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம் பூஞ்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகனன். சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எரட்டுப்பெட்டா முன்னாள் முனிசிபல் சேர்மேன் ரஷீத் இல்லத்திற்கு நடந்தே சென்றுள்ளார். அந்த வீட்டில் உள்ளவர்களிடம் சேர்மேனை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். வந்திருப்பவர் யார் என்று வீட்டினுள் இருந்த சேர்மேனிடம் தெரிவித்துள்ளனர். வெளியே வந்த சேர்மேன் அவரை பார்த்தவுடன், உதவித் தேடி வந்திருக்கிறார் வேறொன்றுமில்லை என்று மோகனனிடம் 20 ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு திரும்பினார்.
திரும்பிபோன அவரை, ''அய்யா, நீங்க கொடுத்ததோட இதையும் சேர்த்து நம்ம மக்களுக்காக முதலமைச்சர் நிவாரண நிதியில் கொடுத்துடுங்க'' என்று கூறியிருக்கிறார். தான் முடித்து வைத்திருந்த சிறிய பையில் இருந்து சில்லரைகளை எடுத்த மோகனன், சேர்மேன் கொடுத்த 20 ரூபாயையும் சேர்த்து 94 ரூபாயை கொடுத்திருக்கிறார்.
இதனை பார்த்து கண்கலங்கிய அந்த சேர்மேன், ''ஒரு நிமிஷம் அப்படியே இருங்க'' என சொல்லிவிட்டு, தனது செல்போன் மூலம் மோகனனை போட்டோ எடுத்து, அதனை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது ஏழ்மை நிலையிலும், அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மோகனனை தனது முகநூலில் பாராட்டியுள்ளார் அந்த சேர்மேன். இந்த பதிவை பார்த்த பலரும் மோகனனுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.