Skip to main content

“உதயநிதிக்கு ஹிட்லர் என்ற பெயர் சரியாக பொருந்தும்” - பசவராஜ் பொம்மை

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

Basavaraj Bommai says the name Hitler is suitable for Udhayanidhi

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், 'சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். சினிமாவில் சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்த பொழுது கலைஞர் தான் 'எந்த காலத்திலடா பேசினால் பராசக்தி' என வசனம் வைத்தார். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்

 

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி வரும் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். அடைவார்'' என்றார்.

 

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, 'கருத்து சொல்ல ஒவ்வொரு கட்சிக்கும் சுதந்திரம் உண்டு. அனைவரது நம்பிக்கையையும் மதிக்கிறோம். ஆனால் சமதர்ம சமுதாயம் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு'' எனத் தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் இந்து அமைப்புகள் அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த அமித் மாளவியா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், “சனாதன தர்மத்தைப் பின்பற்றும் பாரதத்தின் 80% மக்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுக்கிறார்” என குறிப்பிட்டார். இதற்கு அமைச்சர் உதயநிதி, "சனாதனத்தை பின்பற்றுபவர்களை இனப்படுகொலைக்கு அழைக்கவில்லை. பல சமூக சீர்கேடுகளுக்கு சனாதனம் தான் காரணம்” என பதிலடி கொடுத்தார்.

 

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, “இதுதான் இந்நாட்டின் சமூகக் கட்டமைப்பைப் பணயம் வைத்து ஆட்சிக்கு வருவதற்காக ஒன்றிணைந்துள்ள கூட்டணிக் கட்சிகளின் மனநிலை. இது ஜனநாயக விரோதமானது. மனித நேயத்திற்கே எதிரானது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. ஹிட்லர் என்ற வார்த்தை உதயநிதிக்கு சரியாக பொருந்தும்” என கடுமையாக சாடியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்