Skip to main content

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட என்.ஐ.ஏ. 

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Bangalore HOTEL incident NIA made the important announcement

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் மொத்தம் 9 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறுகையில், “ஓட்டலில் வெடித்தது வெடிகுண்டு தான். இது மிக வீரியம் கொண்ட ஐ.ஈ.டி. வெடிகுண்டு என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஓட்டலில் யாரோ ஒருவர் பையை வைத்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த காட்சிகள் அடிப்படையில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர் எந்த பகுதிகளுக்கு சென்றாரோ அந்தந்த பகுதிகளில் உள்ள இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Bangalore HOTEL incident NIA made the important announcement

இந்நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்துள்ளது. இது குறித்து தேசியப் புலனாய்வு முகமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியின் கைதுக்கு வழிவகுக்கும் எந்த ஒரு தகவலுக்கும் ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும். தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். தகவல் அளிப்பவர்கள் 080-29510900, 8904241100 என்ற தொலைப்பேசி எண்களுக்கும், info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் தெரிவிக்கலாம். மேலும் எஸ்.பி., தேசியப் புலனாய்வு முகமை, 3வது தளம், பி.எஸ்.என்.எல். டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், 80 அடி சாலை, எச்.ஏ.எல். 2வது நிலை, இந்திரா நகர், பெங்களூரு, கர்நாடகா - 08 என்ற அஞ்சல் முகவரிக்கும் தெரிவிக்கலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மத்திய அமைச்சரின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
The High Court rejected the Union Minister's request

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்து திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.  இது குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணை  செய்து வருகிறது.

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். 

The High Court rejected the Union Minister's request
கோப்புப்படம்

இதற்கிடையே திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இரு பிரிவினரிடையே கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஷோபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (10.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அமைச்சர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது. அப்போது காவல்துறை சார்பில் வாதிடுகையில், “இந்த வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. எனவே இந்த வழக்கை வெள்ளிக்கிழமை (ஜூலை 18 ஆம் தேதி) வரை தள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “இந்த வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைப்பதாக இருந்தால். அதுவரை மனுதாரர் மீது எவ்வித கடும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனைக் கேட்டறிந்த நீதிபதி, “மத்திய அமைச்சராக உள்ள பொறுப்புள்ள குடிமகனாக உள்ள ஒருவர், குண்டு வைத்த நபர் தமிழ்நாட்டில் பயிற்சி எடுத்தது முன்னதாகவே தெரிந்திருக்கும் பட்சத்தில் பொறுப்பான குடிமகன் என்ற முறையில் போலீசாருக்கு தகவல் அளித்திருக்க வேண்டுமல்லவா. எனவே இந்த வழக்கில் எந்த இடைக்கால நிவாரணமும் வழங்க முடியாது” எனக் கூறி வழக்கை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். 

Next Story

இளம்பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு; மனைவியைக் கொடுமைப்படுத்தும் கணவன்

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
  husband who beaten his wife

பெங்களூரூ அருகே சிக்கபிதரஹள்ளு பகுதியைச் சேர்ந்தவர் கரஷோத்தம். இவர் மல்லேசுவரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கரஷோத்தமிற்கும், ஷில்பா என்ற பெண்ணிற்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இந்தத் தம்பதியினருக்கு 8 வயதில் ஒரு ஆண் மகன் உள்ளார். 

இந்த நிலையில்தான் கரஷோத்தமிற்கும், அவருடன் பணியாற்றும் இளம்பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இது குறித்து மனைவி ஷில்பாவிற்கு தெரியவர இளம்பெண்ணுடனான திருமணத்தை மீறிய உறவை கைவிடவேண்டும் எனக் கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு கரஷோத்தம் மறுப்பு தெரிவிக்க ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளார் ஷில்பா.

இந்தச் சம்பவம் குறித்து கரஷோத்தம், ஷில்பா இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்த நிலையில் கரஷோத்தம், இளம்பெண்ணை தனது வீட்டிற்கே அழைத்து வந்துள்ளார். அப்போது இளம்பெண்ணும் கரஷோத்தம் ஒன்றாக இருபப்தை ஷில்பா புகைப்படம் எடுத்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த கரஷோத்தம் ஷில்பவை கடுமையாக தாக்கியுள்ளார்; மேலும் நீ உயிரோடு இருந்தால், எங்களால் வாழ முடியாது. நீ தற்கொலை செய்துகொள் என்று கூறி கொடூரமாக தாக்கியுள்ளார், 

இதனைத் தொடர்ந்து ஷில்பாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குக்கு சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஷில்பா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் கரஷோத்தை தேடி வருகின்றனர்.