பக்ரீத் பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்று வருகிறது.
ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று (10/07/2022) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, முக்கிய பள்ளி வாசல்களில் காலையில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. தலைநகர் டெல்லியில் உள்ள மசூதிகளில் நடைபெற்ற தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ஈகைத் திருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் இஸ்லாமிய மக்களுக்கு ஈகை திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.