அயோத்தி நில வழக்கில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டு அனுமதியளித்தது. மேலும், ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, மத்திய அரசு ஸ்ரீ ராம்ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற அறக்கட்டளையை அமைத்தது.
இதன்தொடர்ச்சியாக பிரதமர் மோடி, கடந்தாண்டு ஆகஸ்ட் ஐந்தாம் தேதி அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து அங்கு தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு இறுதியில் அயோத்தி ராமர் கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கோயிலின் ஒட்டுமொத்த கட்டுமான பணிகளும் 2025 ஆம் ஆண்டு நிறைவுபெறும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த ராமர் கோயில் வளாகத்தில் அருங்காட்சியகமும், மின்னணு காப்பகமும் அமையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.