புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள பாரதிதாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று கல்லூரி மாணவிகளுக்கான வாக்காளர் சேர்ப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உதவி வாக்காளர் அதிகாரி, வட்டாட்சியர் மற்றும் கல்லூரி முதல்வர் கலந்துகொண்டு புதிய வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை 'வோட்டர் ஹெல்ப் லைன்' என்கிற செயலி மூலம் தங்களைப் பதிவு செய்வது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டுப் பதிவு செய்தனர்.
'வோட்டர் ஹெல்ப் லைன்' என்கிற செயலி மூலம் கல்லூரி மாணவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையைப் பெறுவதற்காகப் பூர்த்தி செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் ஒவ்வொருவரின் வாக்குரிமை, ஒவ்வொரு வாக்கின் மதிப்பு, இளம் வாக்காளர்களே தேசத்தின் வலிமையான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வலிமை உள்ளவர்கள் என்பது குறித்து விளக்கமளித்தனர்.
தொடர்ந்து மாணவிகள் பலரும் தங்களது வாக்காளர் விவரங்களைச் செயலி மூலம் பதிவு செய்தனர். நிகழ்ச்சியில் தேர்தல் அதிகாரிகள் ஜெகநாதன், சத்தியமூர்த்தி, ஜெகன், சிவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளைக் கல்லூரி நிர்வாகம் மற்றும் தேர்தல் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.