டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று (25.10.2021) காலை 11 மணிக்கு 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களும் விருதுகளைப் பெற்றனர். திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நிலையில், இம்முறை ரஜினிகாந்திற்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்தியத் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருதை வழங்கினார். அதன்பிறகு விழா மேடையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ''இவ்விருதினை பெறுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த விருதினை அளித்த மத்திய அரசுக்கு நன்றி. இந்த நேரத்தில் என்னை உருவாக்கிய கே. பாலச்சந்தர் சாரை நினைவில்கொள்கிறேன். இந்த விருதை கே. பாலச்சந்தர் சார் அவர்களுக்கும், தந்தையைப்போல் இருந்து எனக்கு ஆன்மிகம் போதித்த எனது சகோதரர் சத்தியநாராயணா கெய்க்வாட்க்கும், நான் கர்நாடகாவில் பேருந்து நடத்துநராக இருந்தபோது என்னிடம் இருந்த நடிப்பு திறமையைக் கண்டறிந்து என்னை ஊக்குவித்ததோடு, சினிமாவில் நான் சேர காரணமாக இருந்த என்னுடைய நண்பன், பேருந்து ஓட்டுநர் ராஜ்பகதூருக்கும் இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன்.
என் படங்களை இயக்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், உடன் நடித்த நடிகர்கள், எனது திரைப்படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடகத்துறையினர், எனது ரசிகர்கள் என அனைவருக்கும் எனது நன்றி. தமிழ் மக்கள் இல்லாமல் நான் இல்லை. என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி.. ஜெய் ஹிந்த்'' எனப் பேசினார்.