Assam Chief Minister says We will arrest Rahul Gandhi after Lok Sabha elections

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார்.இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ‘பாரத் நீதி யாத்திரை’ (மக்கள் சந்திப்பு பயணம்) எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் கட்ட நடைப்பயணம் கடந்த 14 ஆம் தேதி முதல் மணிப்பூரிலிருந்து தொடங்கியுள்ளது. மேலும், மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தவுள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஜக அரசு ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்குப் பல்வேறு இடையூறுகளைக் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், ஜோராபட்டில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடஅனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கவுஹாத்திக்குள் ராகுல் காந்தி நுழைய முற்பட்டபோது போலீசார் தடுப்புகள் அமைத்து அவரை நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கவுஹாத்தியில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதால் மக்களை போராட்டம் நடத்த ராகுல் காந்தி தூண்டியதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவின் பேரில், ராகுல் காந்தி மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக அரசைக் கண்டித்தும், முதல்வரை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Assam Chief Minister says We will arrest Rahul Gandhi after Lok Sabha elections

இதனைத்தொடர்ந்து, அசாம் மாநிலம் பார்பேட்டா பகுதியில் ராகுல் காந்தியின் யாத்திரை நேற்று (24-01-24) நடைபெற்றது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “வழக்குகளை போட்டு என்னை மிரட்டலாம் என்ற எண்ணம் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. உங்களால் முடிந்த அளவு வழக்குகளை பதிவு செய்யுங்கள். நான் பயப்படமாட்டேன். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் என்னை மிரட்ட முடியாது” என்று கூறினார்.

Advertisment

இந்த நிலையில், ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பகிரங்கமாகத்தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “நாங்கள் சிறப்பு விசாரணைக் குழு அமைப்போம். இந்த குழு ராகுல் காந்திக்கு எதிரான வழக்குகள் குறித்து விசாரணை நடத்தும். மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நாங்கள் அவரைக் கைது செய்வோம். தற்போது நடவடிக்கை எடுத்தால், இது அரசியல் நடவடிக்கை எனக் கூறுவார்கள். எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. கவுகாத்தியில் மக்களை தூண்டும் வகையில் பெரிய சம்பவம் நடைபெற்றுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.