Skip to main content

"இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மாட்டிறைச்சி விற்க தடை" - அசாம் அரசின் புதிய மசோதாவால் சர்ச்சை!

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

assam cm

 

அசாம் மாநில சட்டப்பேரவை நேற்று (12.07.2021) கூடிய நிலையில், அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கால்நடைகளைப் பாதுகாக்கும் புதிய சட்ட  மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதாவில், கால்நடைகளை ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்திற்கு கொண்டு செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மசோதாவில், மாட்டிறைச்சி விற்பனை குறித்த பிரிவுகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

 

இந்தக் கால்நடை பாதுகாப்பு மசோதா இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் மாட்டுக்கறி சாப்பிடாத சமூக மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மாட்டிறைச்சி விற்பதை தடை செய்கிறது. அதேபோல் கோவில்கள், வைணவ மடங்கள் போன்ற இந்து மத தளங்களைச் சுற்றி ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பதை தடை செய்கிறது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு 3 முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் எனவும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மசோதாவிற்கு அசாம் மாநில காங்கிரஸும், இஸ்லாமிய அமைப்புகளும் கண்டம் தெரிவித்துள்ளன. இது வகுப்புவாத பதற்றத்திற்கு வழிவகுக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மக்களின் உணவுப் பழக்கத்தில் அரசு தலையிடக்கூடாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இஸ்லாமியர்களின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை” - அசாம் முதல்வரின் சர்ச்சை பேச்சு

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Controversial speech of Assam Chief Minister about islam people

அசாம் மாநிலத்தில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் அவ்வப்போது, இஸ்லாமியர்கள் அவதூறாகவும், கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் அதிக பெரும்பான்மை மக்களாக இஸ்லாமிய மக்கள் இருக்கிறார்கள் என்று கூறியது சர்ச்சையாக மாறியுள்ளது. 

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “2041-க்குள் அசாம், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலமாக மாறும். இது நிஜம், யாராலும் தடுக்க முடியாது. மாநிலத்தில் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இஸ்லாமிய மக்கள் தொகை சுமார் 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவர மாதிரியின்படி அசாமின் மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் இப்போது 40 சதவீதமாகிவிட்டனர். எனது அரசாங்கம் இஸ்லாமியர்கள் மத்தியில் மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால், ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இந்து சமூகத்தின் மக்கள்தொகை சுமார் 16 சதவீதம் அதிகரித்து வருகிறது. இஸ்லாமியர்களின் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் காங்கிரஸுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. ராகுல் காந்தி மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் பிராண்ட் அம்பாசிடராக மாறினால், அவர் சொல்வதை மட்டுமே கேட்கும் சமூகத்தினரை அது கட்டுப்படுத்தும். மாநிலத்தின் மக்கள்தொகையில் ஏற்பட்ட மாற்றம் ஒரு பெரிய பிரச்சினை. நாம் பல மாவட்டங்களை இழந்துள்ளோம். இது எனக்கு அரசியல் பிரச்சினை அல்ல. இது எனக்கு வாழ்வா? சாவா? பிரச்சனை” எனப் பேசினார். இஸ்லாமியர்களின் மக்கள் தொகை குறித்து பா.ஜ.க முதல்வர் பேசியிருப்பது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

Next Story

இரவில் திருட்டு; விடியும் முன்பே சந்தையில் விற்பனை; கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
 The man who stole a cow and sold it in the market was caught and tied up!

புதுக்கோட்டையில் பசு மாட்டை திருடி சந்தையில் விற்ற நபரை பிடித்து கட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி டேவிதார் சாலையைச் சேர்ந்தவர் மகாதேவன் (23). தனது வீட்டில் பசு மாடு வளர்த்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை இரவு பசுமாட்டிற்கு தண்ணீர் வைத்து வீட்டு வாசலில் கட்டிவிட்டு தூங்கிவிட்டனர்.

திங்கட்கிழமை அதிகாலை எழுந்து பார்த்தபோது பசுவை காணவில்லை. அந்தப் பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில் சோகமாக அமர்ந்திருந்த மகாதேவனிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், உங்கள் வீட்டில் நின்ற பசுவை சந்தையில் விற்பனை செய்ய ஒருவர் விலை பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல, சந்தைக்கு விரைந்தார் மகாதேவன். தனது பசுமாட்டை பார்த்ததும் பசு அவரிடம் வந்தது.

பசுவை பிடித்திருந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற போது சந்தையில் நின்ற பலரும் அந்த நபரை பிடித்து அந்த பகுதியில் நின்ற கலவை இயந்திரத்தில் கட்டி வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வந்து கட்டப்பட்டிருந்த நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, பசுவை திருடி விற்க முயன்றவர் அம்மாபட்டினம் வடக்கு தெரு நூர்முகமது என்பதும் அதேபோல ஊர் ஊராகச் சென்று மாடுகளை திருடிச் சென்று பொழுது விடியும் முன்பே சந்தைகளில் விற்று பணம் வாங்கிச் சென்று வருவதும் தெரிய வந்தது. ஆனால் அறந்தாங்கிலேயே திருடி சில மணி நேரத்திலேயே அறந்தாங்கி சந்தையிலேயே விற்க முயன்ற போது சிக்கிக் கொண்டதாக கூறியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த அறந்தாங்கி போலீசார்  வழக்குப்பதிவு செய்து நூர்முகமதுவை கைது செய்துள்ளனர்.