அசாம், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கிடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சனை நிலவிவருகிறது. இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மிசோரம் மாநில எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்த விவசாயிகளின் எட்டு குடிசைகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. இது நேற்று (26.07.2021) கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் இரு மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்தக் கலவரத்தில் இரு மாநில காவல்துறையினரும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்தக் கலவரம் தொடர்பாக இரு மாநிலங்களும், ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தக் கலவரத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மிசோரம் காவல்துறையினரும், குண்டர்களும் ஐந்து அசாம் காவல்துறையினரைக் கொன்றுவிட்டதாக அசாம் முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றஞ்சாட்டியுள்ளர்.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தலையிட்டுள்ளார். இரு மாநில முதல்வர்களுடனும் தொலைபேசியில் அமித்ஷா பேசியதாகவும், வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர அறிவுறுத்தியதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தநிலையில், மோதல் நடந்த பகுதியிலிருந்து இரு மாநில போலீசாரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.