முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றிய ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றுவந்தது.
அதன் தொடர்ச்சியாக, இவ்வழக்கு இன்று (30/11/2021) உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்போலோ மருத்துவமனை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஜெயலலிதா மரணம் பற்றிய ஆறுமுகசாமி ஆணைய விசாரணை விரைவில் முடிந்து மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். மேலும், சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.
இதற்கு நீதிபதிகள், ‘எந்தெந்த சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற பட்டியலைத் தர அப்போலோவுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆறுமுகசாமி ஆணையத்தின் அறை நீதிமன்ற அறைபோல இருக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மேலும், ஆணையத்தின் செயல்பாடுகள், மருத்துவக் குழு உள்ளிட்டவை குறித்து விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்.