கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள கடைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஷைன் குமார் (28). இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் விடுமுறையின் போது தனது சொந்த ஊரான கடைக்கல்லுக்குச் சென்றிருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஷைன் குமார் கடைக்கல் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.
அவர் அளித்த அந்த புகாரில், “கடந்த 24 ஆம் தேதி இரவு அருகிலுள்ள ஜோஷி என்ற எனது நண்பரை சந்தித்து விட்டு வீட்டிற்கு பைக்கில் வந்துகொண்டிருந்தேன். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் 2 பேர் என்னை வழிமறித்து தாக்கினர். அதன் பின்னர், எனது வாயில் டேப் போட்டு ஒட்டி, எனது முதுகில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பான பி.எஃப்.ஐ என்ற பெயரை எழுதுவிட்டு அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்தக் கும்பலில் மொத்தம் 6 பேர் இருந்தனர்” என்று குறிப்பிட்டிருந்தார். ராணுவ வீரரைத் தாக்கியதாகக் கூறப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து கடைக்கல் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், ராணுவ வீரரின் முதுகில் பி.எஃப்.ஐ என எழுதியதால் இது தேசவிரோத சக்திகளின் தாக்குதலாக இருக்கலாம் எனப் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, ராணுவ உளவுத்துறையும் இது குறித்து விசாரணையைத் தொடங்கியது. அதில் சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்ட இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியபோது, அங்கு தாக்குதல் நடந்ததற்கான எந்தவித தடயமும் அவர்களுக்குச் சிக்கவில்லை. இதனிடையே, ராணுவ வீரரைத் தாக்கியவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கேரளா பா.ஜ.க மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, கொல்லம் மாவட்ட எஸ்.பி தலைமையில் இந்த சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் தாக்குதல் நடத்தியதாகக் கூறிய ராணுவ வீரரிடமும், அவரது நண்பரான ஜோஷியிடமும் காவல்துறையினர் துருவித் துருவித் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர். இதில் காவல்துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜோஷியிடம் விசாரணை நடத்திய போது, ஷைன் குமாரின் நாடகம் எனவும் அதனால் அவர் பொய் புகார் அளித்துள்ளார் எனவும் காவல்துறையினருக்குத் தெரியவந்தது. பொய் புகார் அளித்த குற்றத்திற்காக ராணுவ வீரரான ஷைன் குமாரையும், அவரது நண்பரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.