கொலைக் குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து கவலைப்படவில்லையா என அமித்ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரபல ரவுடி சஞ்சீவ் ஜீவா விசாரணைக்காக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்திற்கு நேற்று முன்தினம் (07.06.2023) அழைத்து வரப்பட்டார் அப்போது அங்கு இருந்த மர்ம கும்பலால் சஞ்சீவ் ஜீவா சுட்டுக் கொல்லப்பட்டார். நீதிமன்ற வளாகத்தின் உள்ளே நிகழ்ந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து ரவுடிகள் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கபில் சிபல் ட்விட்டரில், "கடந்த 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை உத்திரப் பிரதேச மாநில போலீஸ் காவலில் இருந்த 41 பேர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் போலீஸ் காவலில் இருந்த சஞ்சீவ் ஜீவா லக்னோ நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். போலீஸ் காவலில் இருந்தபோது அத்திக் மற்றும் அஷ்ரப் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். திகாரில் துல்லு தாஜ் பூரியா சுட்டுக் கொல்லப்பட்டார். ஏன், எப்படி இந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. அமித்ஷா அவர்களே நீங்கள் இது பற்றி கவலைப்படவில்லையா. இது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.