நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பாஜக தலைமையிலான கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது மக்களவையின் தற்காலிக சபாநாயகர் குறித்த உத்தரவை இந்திய குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அறிவிப்பின்படி மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தப் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் எனவும், எம்பிக்கள் பதவியேற்ற பிறகு மக்களவையின் புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதேநேரம் தற்காலிக சபாநாயகர் நியமனத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் நாடாளுமன்ற விதிகளை பாஜக மீதியுள்ளது என தெரிவித்துள்ள காங்கிரஸ், சபாநாயகர் தேர்தலுக்கு முன் மூத்த எம்.பி தான் அவைக்கு தலைமை தாங்க வேண்டும் என்பது விதி. 8 முறை எம்பியாக இருந்த காங்கிரசின் கொடி குன்னிலை நியமிக்கவில்லை. தற்காலிக சபாநாயகராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பர்த்ருஹரி மஹ்தப் ஏழு முறை மட்டுமே எம்.பியாக இருந்தவர் என காங்கிரஸ் விமர்சனத்தை வைத்துள்ளது.