'இந்த எண்ணெய்யைத் தலையில் தடவினால் வழுக்கை தலையில் உடனடியாக முடி முளைக்கும்' என மோசடி செய்து பணம் வசூலித்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் ஒரு பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல் தற்காலிக முகாம் ஒன்றை அமைத்து மூலிகை பொருட்களைக் கொண்டு வழுக்கை தலையில் உடனே முடி வளர வைப்பதற்கான எண்ணெய்யைத் தயாரித்துள்ளோம். இதை வாங்கி நீங்கள் தலையில் தடவினால் முடி முளைக்க ஆரம்பித்து விடும் என விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பி அந்த தற்காலிக முகாம் பகுதியில் மக்கள் கூட்டம் படையெடுத்தது. பலர் வரிசை கட்டி கியூவில் நின்று அந்த எண்ணெய்யை வாங்கி தலையில் தேய்த்துக் கொண்டனர்.
அதோடு மட்டுமல்லாது முகாமிற்குள் செல்வதற்கு 20 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலித்துள்ளனர். அதேபோல் தலையில் தடவப்படும் அந்த மூலிகை எண்ணெய்யை 300 ரூபாய்க்கு விற்றுள்ளனர். இதில் தலையில் எண்ணெய்யை அவர்களே தேய்த்தும் விட்டுள்ளனர். இதில் பலருக்கு தலையில் எரிச்சலும் காயமும் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கொடுத்த புகாரின் பேரில் போலி எண்ணெய் விற்ற இம்ரான், சல்மான், சமீர் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் எண்ணெய்யை விற்ற மூன்று பேரில் ஒருவருடைய தலை வழுக்கை தலையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.