இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டி டெல்லி சந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும் அரசு சார்பில் யாரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் விரக்தியிலிருந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அவர்களது பதக்கங்களை ஆற்றில் வீச நேற்று மாலை 6 மணிக்கு கங்கை நதிக்கரையில் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு கூடிய விவசாய சங்கத்தினர் மல்யுத்த வீரர் வீராங்கனைகளை தடுத்ததோடு ஐந்து நாட்களில் நடவடிக்கை எடுக்க விட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
இந்தநிலையில் பாலியல் குற்றச்சாட்டில் விசாரணை முடியும் வரை காத்திருங்கள் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். 'டெல்லி காவல்துறை விசாரணையை முடிக்கும் வரை காத்திருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், 'மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. உரிய நடவடிக்கை வீரர்களுக்கு ஆதரவாக எடுக்கப்படும் என்ற உத்தரவாதமும் கொடுக்கப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டில் சிக்கிய பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் இன்று செய்தியாளர்கள் சந்தித்துப் பேசுகையில், 'என் மீது எந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தாலும் அதை எதிர்கொள்ள தயார். காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் வழங்கும் எந்த ஒரு தண்டனையும் தான் ஏற்கத் தயாராக இருக்கிறேன்' என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் டெல்லி போலீசாரின் விசாரணை அறிக்கை தான் இந்த விவகாரத்தில் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் இந்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என டெல்லி காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஐந்து நாட்கள் மட்டுமே விவசாய சங்கத்தினர் மத்திய அரசுக்கு இந்த விவகாரத்தில் காலக்கெடு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.