
இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், விலைவாசி கடுமையாக உயர்ந்தது. இதனால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் 21ஆம் தேதி, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படும். மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் ஒவ்வொரு கேஸ் சிலிண்டருக்கும் ரூபாய் 200 மானியம் வழங்கப்படும். ஒரு ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டருக்கு இந்த மானியம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
ஆனால், தொடர்ந்து வணிகப்பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்ந்துவந்தது. அதன்படி கடந்த மூன்று மாதங்களாக ரூ. 455 வரை உயர்ந்த வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் சென்னையில், ரூ. 2,828க்கு விற்பனையாகிவந்தது. இதன் காரணமாக உணவகங்கள் மற்றும் தேனீர் கடைகளில் தேனீர் மற்றும் உணவு பண்டங்களின் விலையும் கணிசமாக உயர்ந்தன. இந்நிலையில், இன்று பெட்ரோலிய நிறுவனங்கள் வணிகப்பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையை ரூ. 134க்கு குறைத்துள்ளது. இதன் மூலம் சென்னையில் வணிகப்பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ. 2,373க்கு விற்பனையாகும்.