இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் வரும் 20 ஓவர் உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வரவுள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளரை நியமிக்க தயாராகிவருகிறது.
அந்தவகையில் இந்திய கிரிக்கெட் வாரியம், அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு ராகுல் டிராவிட்டை கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் தேசிய கிரிக்கெட் மையத்தின் தலைவர் பொறுப்பை தொடர விரும்பியதால், ராகுல் டிராவிட் இந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம், அனில் கும்ப்ளேவை மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அனில் கும்ப்ளே ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்றார். ஆனால், விராட் கோலிக்கும் அவருக்கும் மோதல் வெடித்ததால் அனில் கும்ப்ளே தனது தலைமை பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்தார். தற்போது விராட் கோலி ஒருநாள் போட்டிகளுக்குக்கான கேப்டன் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அனில் கும்ப்ளேவை மீண்டும் தலைமை பயிற்சியாளராக்கும் முயற்சியில் இந்திய கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது கவனிக்கத்தக்கது.
கடந்த 2017ஆம் ஆண்டு அனில் கும்ப்ளே பதவி விலகிய நேரத்தில், அப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினராக இருந்த கங்குலி, கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக தொடர வேண்டும் என விரும்பியதாக கூறப்படுவதும் இங்கே கவனிக்கத்தக்கது. ஒருவேளை தலைமை பயிற்சியாளர் பதவியை அனில் கும்ப்ளே ஏற்க மறுத்தால், வி.வி.எஸ். லட்சுமண் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு மகிளா ஜெயவர்தனேவை இந்திய கிரிக்கெட் வாரியம் அணுகியதாகவும், ஆனால் மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் பதவியை விட்டுவர அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியை அவர் ஏற்க விரும்புவதால், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை அவர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.