Skip to main content

தாயின் சடலத்தை டூவீலரில் எடுத்துச்சென்ற மகன்!

Published on 28/04/2021 | Edited on 28/04/2021

 

andhra pradesh women incident son bike coronavirus hosptial doctors

 

இந்திய தேசம் முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டருக்கும், தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அமரர் ஊர்திக்கும் தட்டுப்பாடாகி உள்ளது. கரோனாவால் இறந்துபோன தாயின் உடலை, இருசக்கர வாகனத்தில் மகன் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்ற அவலம் நிகழ்ந்திருக்கிறது.

 

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் அருகிலுள்ள கில்லோயி கிராமத்தைச் சேர்ந்தவர் செஞ்சு (வயது 51). இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், கரோனாவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவருடைய மகன் நரேந்திரா, உறவினர் ரமேஷ் ஆகியோர் அருகிலுள்ள டவுண் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, சில பரிசோதனைகளைச் செய்து வருமாறு மருத்துவர்கள் கூறியதால், தனியார் லேப்புக்கு சென்று பரிசோதனை செய்துள்ளனர். அதன் முடிவுக்காக மருத்துவமனையில் காத்திருந்தபோதே, செஞ்சுவுக்கு  மூச்சு நின்றுபோனது. 

andhra pradesh women incident son bike coronavirus hosptial doctors

 

சிறிதுநேரத்தில் பரிசோதனை முடிவும் கரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. இதையடுத்து, தாயின் உடலை எடுத்துச் செல்ல தனியார் வாடகை வாகனங்களை நாடியிருக்கின்றனர். கரோனா பயத்தால், யாரும் உதவ முன் வரவில்லை. அரசுத் தரப்பிலும், தற்சமயம் அமரர் ஊர்தி இல்லை என கை விரித்துவிட்டனர். அதனால், இருசக்கர வாகனத்திலேயே தாயின் சடலத்தைக் கொண்டு செல்ல முடிவு செய்த நரேந்திரா, உடலைப் பின் இருக்கையில் உறவினர் ரமேஷுக்கு இடையில் அமரவைத்தே, 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொந்த ஊருக்குக் கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. வழியில் போலீஸ்காரர் ஒருவர் நிறுத்தி விசாரித்திருக்கிறார். அவரிடம் நடந்ததைச் சொல்லி அழுதார் நரேந்திரா. போலீஸ்காரர் பரிதாபப்பட்டாரே தவிர, மேற்கொண்டு உதவி ஏதும் செய்யவில்லை.

 

நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கரோனா இறப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மருத்துவமனைகளில் இடம் இல்லை. மயானங்களிலும் இடம் இல்லை. அதனால், சடலங்கள் மொத்தமாக தகனம் செய்யப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து, அமரர் ஊர்திக்கும் தட்டுப்பாடு வந்துவிட்டது, மோடியின் புதிய இந்தியாவில்! 

 

 

சார்ந்த செய்திகள்