தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.