ஆந்திர மாநிலத்தில் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அறிவிப்புகள், புதிய திட்டங்கள் என ஆந்திர மாநிலத்தில் பல அதிரடி நடவடிக்கைளை எடுத்து வருகிறார். இந்நிலையில் ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் இன்று நடைபெற்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல் ஏக்கள் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் அமைச்சரவையின் விரிவாக்கம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் 5 துணை முதல்வர்களை நியமிக்க முதல்வர் ஜெகன்மோகன் முடிவு செய்துள்ளார்.
அதன் படி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திருக்கும் ஒரு துணை முதல்வர் வீதம் ஐந்து துணை முதல்வர்கள் நியமிக்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒப்புதல் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா கூட்டு ஆளுநர் நரசிம்மனை சந்திக்கும் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் பட்டியலை வழங்குகிறார் . அதன் பிறகு ஓரிரு நாளில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் நிகழ்வு நடைப்பெறவுள்ளது. ஜெகனின் இந்த நடவடிக்கையை பார்த்து முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ந்து போய் உள்ளார்.
இந்தியாவிலேயே அதிக துணை முதல்வர்கள் கொண்ட மாநிலமாக ஆந்திர மாநிலம் உருவாகிறது. இந்தியாவில் மிகபெரிய மாநிலமாக உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்திலேயே 2 துணை முதல்வர்கள் மட்டும் உள்ள நிலையில், ஜெகன்மோகனின் இந்த அதிரடி நடவடிக்கையை கண்டு பல மாநில முதல்வர்கள் வியந்து போய் உள்ளனர். மாநில அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொரு மக்களுக்கும் சென்றடையும் வகையில் முதல்வர் ஜெகன் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.