மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டமாக 430 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஆறாம் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (25-05-24) 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-05-24) மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், சந்த் கபீர் நகர் பகுதியில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தியா கூட்டணி, கர்நாடகாவில், பிற்படுத்தப்பட்டோருக்கு 5% இடஒதுக்கீடு அளித்துள்ளது. ஹைதராபாத்தில் இஸ்லாமியர்களுக்கு 4% இடஒதுக்கீடு அளித்துள்ளது. மேற்கு வங்கத்தில், முஸ்லீம்களுக்கு தவறாக வழங்கப்பட்ட ஓபிசி இடஒதுக்கீட்டிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸிலிருந்து நாட்டை யாரால் பாதுகாக்க முடியும்? சந்திரனுக்கு சந்திராயன் அனுப்ப யாரால் முடியும்?. கோடிக்கணக்கான ஏழைகளுக்கு யார் எரிவாயு இணைப்பு கொடுக்க முடியும்? 80 கோடி மக்களுக்கு யார் ரேஷன் கொடுக்க முடியும்? 30 கோடிக்கும் அதிகமான மக்களின் 5 லட்சம் வரையிலான சுகாதாரச் செலவை யாரால் தாங்க முடியும்? 14 கோடி வீடுகளுக்கு குழாய் நீரை யார் விட முடியும்? 12 கோடி வீடுகளில் யாரால் கழிப்பறை கட்ட முடியும்? மோடியால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்றால், யாரை பிரதமராக்க வேண்டும்?” எனப் பேசினார்.
மேலும் அவர், “இன்று நான் ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் பெரும்பான்மை பெற்றால் உங்கள் பிரதமர் யார்?. சரத் பவார், லாலு யாதவ் அல்லது உத்தவ் தாக்கரே பிரதமராக முடியுமா?. ராகுல் காந்தி பிரதமராக முடியுமா?. முதல் ஐந்து கட்டத் தேர்தலில் இந்தியா கூட்டணி அழிக்கப்பட்டது. நான் சொல்கிறேன், இந்த முறை காங்கிரசுக்கு 40 இடங்கள் கூட கிடைக்காது, அகிலேஷ் யாதவுக்கு 4 இடங்கள் கூட கிடைக்காது. லாலு பிரசாத் யாதவ் தனது மகனை முதல்வராக்க விரும்புகிறார், உத்தவ் தாக்கரே தனது மகனை முதல்வராக்க விரும்புகிறார், சரத் பவார் தனது மகளை முதல்வராக்க விரும்புகிறார், ஸ்டாலின் தனது மகனை முதல்வராக்க விரும்புகிறார், சோனியா காந்தியும் தன் மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க விரும்புகிறார்.
ஒருபுறம் இத்தாலி, தாய்லாந்து, பாங்காக் என்று புறப்படும் ராகுல் காந்தி. மறுபுறம், 23 ஆண்டுகளாக லீவு எடுக்காமல், எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கூட கொண்டாடும் நரேந்திர மோடி. ராமர் கோயில் கட்டியவருக்கும், ராமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கும் இடையேயான தேர்தல் இது” என்று கூறினார்.