வன்முறையால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் கள நிலவரம் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்தும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் கொண்ட குழு மணிப்பூருக்கு நேரில் சென்று இரு குழுக்களாக கடந்த 29 மற்றும் 30 ஆகிய இரு நாட்கள் ஆய்வு செய்தனர். 21 எம்.பி.க்கள் கொண்ட இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர். மேலும் அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
அப்போது கடந்த மே மாதம் 4 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர். இரு சமூகங்களைச் சேர்ந்த மக்களையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர். இதையடுத்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவுடன் சந்தித்துப் பேசினர். அப்போது மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புவது அவசியம். இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். மணிப்பூர் சென்று திரும்பியுள்ள 21 எம்,பி.க்களும் இந்தச் சந்திப்பின் போது உடன் இருந்தனர். குடியரசுத் தலைவர் உடனான இந்தச் சந்திப்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கனிமொழி எம்.பி., தொல்.திருமாவளவன் எம்.பி. ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து 'இந்தியா' கூட்டணித் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மணிப்பூர் விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து முறையிட்டோம். மணிப்பூரில் நடந்த விவகாரங்கள் குறித்தும், அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எடுத்துரைத்தார். அவரைத் தொடர்ந்து மணிப்பூர் பயணத்தின் போது எம்.பி.க்கள் குழுவை தலைமை தாங்கிச் சென்ற காங்கிரஸ் கட்சி மக்களவைத் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி மேலும் விளக்கினார்.
பின்னர் இது குறித்த கோரிக்கை மனுவை குடியரசுத் தலைவரிடம் அதிர் ரஞ்சன் சௌத்ரி சமர்ப்பித்தார். மணிப்பூருக்கு பிரதமர் நேரடியாகச் செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும். இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சுமூகமான தீர்வைக் காண வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கை மனுவில் உள்ள பிரதானமான கருத்து ஆகும். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட குடியரசுத் தலைவர் ஓரிரு வார்த்தைகளில் தனது பதிலைப் பகிர்ந்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும், இது குறித்து பரிசீலிக்கப்படும் என்கிற அளவில் பதில் இருந்தது” எனத் தெரிவித்தார்.