அசாம் முதலமைச்சர் மனைவியின் நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ. 10 கோடி மானியம் வழங்கியிருப்பதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் சில தினங்களுக்கு காய்கறிகளின் விலை அதிகரித்தது குறித்து பேசுகையில், “காய்கறிகளின் விலை அதிகமாக உயரவில்லை. அங்கு காய்கறி விற்கும் மியாக்கள் (வங்க மொழி பேசும் இஸ்லாமிய வியாபாரிகள்) தான் அதிக விலை வைத்து விற்பனை செய்கிறார்கள்” என்று பேசியிருந்தார். இது அப்போது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதுபோன்று அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ் கோகாய் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவியான ரினிகி பூயன் சர்மா அங்கம் வகிக்கும் நிறுவனம், மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தில் ரூ. 10 கோடி மானியம் பெற்றுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ் கோகாய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகக் கூறி பிரதமர் மோடி கிசான் சம்பதா திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆனால், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனது மனைவியின் நிறுவனத்திற்கு ரூ. 10 கோடி மானியம் பெற உதவியுள்ளார். மத்திய அரசின் திட்டம் அனைத்தும் பா.ஜ.கவை வளப்படுத்துவதற்கா” என்று கேள்வி எழுப்பி அத்துடன் மானியம் பெற்றதற்கான ஆதாரம் என்று கூறி ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் ஹிமந்த பிஸ்வா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “எனது மனைவியோ அல்லது அவர் தொடர்புடைய நிறுவனமோ இந்திய அரசிடம் இருந்து எந்தவித நிதி மானியமும் பெற்றதில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக கெளரவ் கோகாய், “உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்தின் இணையதளத்தில் முதலமைச்சரின் மனைவியின் பெயரையும், நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிட்டு ரூ. 10 கோடி மானியத்துக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது தெளிவாகக் காட்டுகிறது. உங்களின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டிருந்தால் மத்திய அமைச்சரிடம் தெரிவிக்கவும்” என்று கூறி மானியம் அளிக்கப்பட்டதற்கான ஆதாரத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து, ஹிமந்த பிஸ்வா, “நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம். நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு எதிராகப் பேச சட்டசபைக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்ல முடிவு செய்தாலும் அந்த முடிவை நான் எடுப்பேன். இதுகுறித்து நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை என் கருத்தை என்னால் நிரூபிக்க முடியும்.” என்று தெரிவித்தார். இப்படியாக இரு தலைவர்களுக்கு இடையே கடுமையான உரையாடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.