தமிழ்நாடு கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்யும் தமிழ்நாட்டு அரசின் முடிவுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்து உத்தரவு பிறப்பித்தது. மேலும், அதன் அடிப்படையில் பலரை அர்ச்சகராகவும் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், இது தொடர்பாக மனுக்கள் அவ்வப்பொழுது தாக்கல் செய்யப்பட்டு அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் நிகழ்வுகளும் நடைபெற்றது. இறுதியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் மற்றும் சில தனிநபர்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் தொடர்பாக தமிழ்நாடு அரசு முடிவுக்கு எதிராக தொடர்ந்த மனு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் வழக்கில் அரசு வெளியிட்ட விதிகள் செல்லும். அதேவேளை ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆகம விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட வேண்டும்” என தீர்ப்பு வழங்கியது.
இதேபோல், உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பாக பல்வேறு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஒன்றாக பாஜகவின் மூத்தத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் ஒரு ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் விவகாரத்தில் புதியதாக அர்ச்சகர்களை நியமிப்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே பணியில் இருப்பவர்களை இடை நீக்கம் செய்யவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்சநீதிமன்றம், “தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கும் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது” என்று தெரிவித்தது. மேலும், சுப்பிரமணியன் சுவாமி மனு மீது பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி நிலுவையில் இருக்கும் ரிட் மனுக்களுடன், சுப்பிரமணியன் சுவாமியின் ரிட் மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.