Skip to main content

காங்கிரஸ் - சமாஜ்வாதி தொகுதிப் பங்கீடு; மனம் மாறிய அகிலேஷ் யாதவ்?

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Akhilesh Yadav changed his mind for Congress - Samajwadi constituency distribution

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. முன்னதாக, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்காமல் தனித்து நிற்க முடிவு செய்தது. அதே போல், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்காமல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து நிற்க முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணிகள் சார்பில் நடந்த தொகுதி பங்கீட்டில் சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார். நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்திருந்தார். 

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது மேலும், சமாஜ்வாதி கட்சி 62 இடங்களிலும், சந்திரசேகர் ஆசாத் கட்சி ஒரு இடத்திலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை வெளியாகும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

இது குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்துள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ.க செய்த தில்லுமுல்லு போல் இதுவரை யாரும் செய்தது இல்லை. பா.ஜ.க செய்த தில்லுமுல்லு செயல்களை உச்சநீதிமன்றமே உறுதி செய்துள்ளது. உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க துடைத்தெறியப்படும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்